ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் நாளை புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சந்திப்பு ஒத்தவைக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தால் கூட்டமைப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
எனினும் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த டிசம்பர் மாதம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தது. அதன் பின்பு கடந்த பெப்ரவரி மாதம் அவர்களின் அழைப்பின் பேரில் அவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சந்தித்தது.இந்த செயற்பாட்டை முன்கொண்டு செல்வது சம்பந்தமாக ஜனாதிபதியோடு உரையாடுவதற்கே இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட் )தலைவர் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ )தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குகொள்ளவிருந்தனர்.