தற்போதுள்ள கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க வேண்டி ஏற்படலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
சமூகத்தில், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற குழப்பம் எழுந்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால், மீண்டும் கொவிட் தொற்று சடுதியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே பயண கட்டுப்பாட்டை கடுமையாக்கி, தேவையற்ற நடமாட்டங்களை குறைப்பதோடு கண்காணிக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“இலங்கையில் தினசரி தொற்று எண்ணிக்கை 2000 ஐ விடவும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில் நாடு ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று நாங்கள் கூற முடியாது,” என வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் முடிந்த பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும் வைத்தியர் பத்மா குணரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.