
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவியில் இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஜூம்மா தொழுகையின் பின்னர் சமூக இடைவெளி பேணப்பட்டு, முகக் கவசம் உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதி அல்ல,அவர் சிறுபான்மை மக்களின் தலைவர்”, “சிறுபான்மை கட்சிகளை அழிக்காதே”, “சஜீத்தை ஆதரித்தது குற்றமா?”, “சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 20 ஆவது சீர்திருத்தம் எமக்கு வேண்டாம்” உள்ளிட்ட மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தி கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.