July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 605 பேரின் சடலங்கள் நல்லடக்கம்!

இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 605 பேரின் சடலங்கள் கடந்த 4 மாதங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஓட்டமாவடி பகுதியில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இலங்கையில் நோற்று (14) மாலை வரை 2,250 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் 572 முஸ்லிம்கள், 14 இந்துக்கள், 12 கிறிஸ்தவர்கள் மற்றும் 7 பௌத்தர்களின் சடலங்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் நீண்ட நாட்களாக கொரோனாவால் உயிரிழந்த தமது உறவுகளின் உடல்களை அடக்கம் செய்ய கோரி சிறுபான்மை மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

தேசிய மற்றும் சர்வதே அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியது.

கொவிட்-19 காரணமாக இறந்தவர்களின் உடல்கள் எவ்வாறு பாதுகாப்பாக கையாளப்பட வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதற்கமைய உலகெங்கிலும் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பவர்களை தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு அனுமதித்துள்ளன.