
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று முழு நாடும் அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அத்துடன், மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களின் கூட்டாளிகளை வளப்படுத்துவது தான் அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,
இன்று இந்த நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாட்டில் எரிபொருளின் விலை உயரும்போது, அது போக்குவரத்து கட்டணம், உணவு மற்றும் பானங்கள் போன்ற அனைத்து துறைகளிலும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது.
நல்லாட்சி அரசாங்கம் எரிபொருளின் விலையைக் குறைத்துவிட்டுதான் ஆட்சியைத் தொடங்கியது. அதை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வந்தோம். எம்மிடம் எரிபொருளுக்கான ஒரு சூத்திரம் இருந்தது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 20 ரூபாவால் குறைந்தது. உலக எரிபொருளின் விலையும் குறைந்தது. ஆனால், இந்த அரசாங்கம் அவ்வாறு மக்களுக்கு எரிபொருள் நிவாரணம் கொடுக்கவில்லை.
அதற்குப் பதிலாக எரிபொருள் மூலம் கிடைக்கின்ற பணத்தை வைப்புச்செய்து மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இன்று அரசாங்கத்திடம் பணம் இல்லை. வரிச் சலுகைகளை தமது நெருங்கிய வியாபாரிகளுக்கு கொடுத்தார்கள்.
தனவந்தர்களுக்கு வரி சலுகையை வழங்கியமையின் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது அந்த சுமையை மக்கள் மீது இறக்க முயற்சிக்கின்றனர். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
அதுமாத்திரமின்றி, இந்த அரசாங்கம் ஒரு புதிய மோசடியை தொடங்கியுள்ளது. சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் அனைத்தையும் கடத்தல்காரர்களிடம் கொடுத்து இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் வரிப் பணத்தை இழந்து தாய்நாட்டை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். தாய்நாடு என்பது எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் சொந்தமான ஒன்று என அவர் தெரிவித்தார்.