
இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் குறிப்பாக இந்திய மீனவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த வைரஸ் நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் பரவும் B.1.617 (டெல்டா) கொரோனா வைரஸ் திரிபுடன், வஸ்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இரண்டாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தார்.
டெல்டா கொரோனா வைரஸ் வகை என்பது, B.1.617.2 கொரோனா வைரஸ் வகையாகும். இது ஒருவரிடமிருந்து 5 முதல் 8 பேருக்கு பரவல் அடைகிறது.
ஆல்பா வைரஸ் வகையை விடவும் 50% அதிகமாக இந்த வைரஸ் பரவக்கூடியது என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வைரஸ் பரிணாம வளர்ச்சியை ஆராயும் மருத்துவர் அரிஸ் கட்ஸொராகிஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு காரணமான இந்த டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி டெல்டா பிளஸ்’ ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.