எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை முகவரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
கப்பலின் இலங்கைக்கான முகவர் நிறுவன பிரதானியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய கப்பல் அனர்த்தம் தொடர்பில் 33 வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
கப்பலுடன் தொடர்புபட்ட இலங்கை முகவர் உட்பட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கப்பலின் கறுப்புப் பெட்டியை ஆராய்ந்து வருவதாகவும், கறுப்புப் பெட்டியில் கப்பலின் இயக்கம், தகவல் பரிமாற்ற தகவல்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் தலைமை மாலுமி நேற்று கைது செய்யப்பட்டு, இரண்டு மில்லியன் ரூபாய் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.