நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன், வெலி ஓயா பகுதி மக்கள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வெலி ஓயா பகுதியில் சுமார் 6 ஆயிரம் பேர் வாழ்வதுடன் சுமார் 950 பேர் பெருந்தோட்ட துறையில் தொழில் புரிகின்றனர்.
அதேநேரம், இந்தப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் எட்டாக்கனியாகவே உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு தோட்ட நுழைவாயிலில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அனுமதி பெற்றவர்கள்கூட வெளியேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு நிலையங்களிலும் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே, விலை குறைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் நோயாளிகள் கூட வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
இதேவேளை, 30 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் நேற்றைய தினம் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.