யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில், 200 கட்டில்களுடன் இந்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே இந்த மாவட்டத்தில் தொற்று அதிகரித்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றதாகவும், சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி உற்சவங்கள் நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மக்கள் நிலைமைகளை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்று இராணுவக் கட்டளைத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.