கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றை அவுஸ்திரேலியா விடுவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றின் 3 வயது சிறுமி தர்னிகா நோயுற்றதைத் தொடர்ந்தே, அவுஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான அனுமதி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை, குறித்த குடும்பம் பேர்த் நகரில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 வயது சிறுமி தர்னிகா நோயுற்றதைத் தொடர்ந்து, இந்தக் குடும்பத்தை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களும் முன்வைக்கப்பட்டன.
தர்னிகா நோயுற்ற போது, தாயுடன் பேர்த் மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக இடமாற்றப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், தந்தை மற்றும் மூத்த சகோதரியையும் அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் இருந்து விடுவித்துள்ளது.
அவர்கள் பேர்த் புற நகர்ப் பகுதியில் உள்ள அரசாங்க வீடொன்றில் கண்காணிப்புடன் கூடிய ‘சமூக தடுப்புக் காவலில்’ வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தர்னிகா இரத்த நச்சுப்பாடு மற்றும் நியுமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு சிகிச்சை வழங்குவதில் கிறிஸ்மஸ் தீவு அதிகாரிகள் தவறிழைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறுமி நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது.