July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல; வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்,இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் பொறுப்பதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்களை கண்மூடித்தனமாக கைது செய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் வெளிவிவகார அமைச்சர் இதன் போது நிராகரித்துள்ளார்.

பொதுமக்கள் மீது இழைக்கப்பட்டகொடூரமான செயல்களிற்கு தீர்வை காண்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது .

எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதன் விதிகளை மறு ஆய்வு செய்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஏனைய சர்வதேச சட்டங்களின் நியாயாதிக்கங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், அதன் அரசியலமைப்பு ஆணை மற்றும் சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப, அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 12 (1) இன் படி அனைத்து நபர்களும் சமமானவர்கள் என்பதையும், சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்பதையும் உறுதி செய்கிறது.

அரசியலமைப்பின் 12 (2) வது பிரிவு இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டை தடை செய்கிறது எனவும் இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.