
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இடைக்கால நட்ட ஈடாக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கோர உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கப்பல் தீ விபத்தை கட்டுப்படுத்த அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள செலவுகள் மற்றும் மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பிற்காக இந்த நட்ட ஈடு கோரப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நட்ட ஈடு கேட்பதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்க சர்வதேச வல்லுனர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுடன் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாகவும், அடுத்த மாதம் 15 ஆம் திகதி மூவர் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்று இலங்கை வருவதுடன், அவர்கள் மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் இடைக்கால நட்ட ஈடானது கடந்த மே மாதம் 23 ஆம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கப்பலின் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் அரச நிறுவனங்கள் செயற்பட்டதால் ஏற்பட்ட நட்டமாக கருத்தில் கொண்டு இந்த நட்டஈடு கோரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு குறித்த பத்து நாட்களில் மீனவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு நட்டஈடு வழங்கும் விதமாக குறித்த நிறுவனத்திடம் இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.