February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பிளாஸ்டிக் போத்தல்களை தடைப்பட்டியலில் சேர்ப்பது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சு ஆலோசனை!

இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் 400 மில்லி லீட்டர் பிளாஸ்டிக் போத்தல்களும் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அல்லது பொலித்தீனால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இலங்கையில் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டது.எனினும் பிளாஸ்டிக் போத்தல்களின் பாவனைக்கு தடை விதிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே பிளாஸ்டிக் போத்தல்களினால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆராய்வதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

எனினும், இந்த தடையினால் பாதிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு, இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை ஏற்றுக் கொள்ளவோ ​​நிராகரிக்கவோ சுற்றுச்சூழல் அமைச்சுக்கு பூரண அதிகாரம் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதனிடையே பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட திரவத்தை கொள்வனவு செய்யும் போது அதன் விலையுடன் 10 ரூபாவை வைப்பு தொகையாக பெற்றுக்கொள்ளும் யோசனையை உற்பத்தியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி, உபயோகிக்கப்பட்ட போத்தல்களை திருப்பி கொடுப்பதன் மூலம் 10 ரூபா கழிவுடன் திரவங்கள் அடங்கிய போத்தல்களை கொள்வனவு செய்ய முடிவதுடன், இதன்மூலம் போத்தல்கள் மீள் கூழற்சிக்கு உட்படுத்த முடியும் என பிளாஸ்டிக் போத்தல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.