அமைச்சர் உதய கம்மன்பில மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தின் எட்டு பங்காளிக் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தின் பொறுப்பை அமைச்சர் மீது சுமத்த எடுக்கும் முயற்சிக்கான கண்டனம் எனும் தலைப்பில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையை கண்டித்தே, ஒன்பது கட்சிகளும் பதிலளித்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்கும் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்தும் குழுக்கள் அரசாங்கத்தினுள் இருப்பதாகவும், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் குறித்த கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான அபே ஜனபல கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, தேசிய காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா கொம்யுனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆகிய கட்சிகளே இவ்வாறு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மானியங்களை வழங்கக்கூடிய யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்புடன் நடைபெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எரிசக்தி அமைச்சரின் மீது சுமத்த எடுக்கும் முயற்சியை குறித்த கட்சிகள் நிராகரித்துள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளால் அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை இல்லாமல் போவதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.