January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பசில் ராஜபக்‌ஷ இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிப்பை அனுமதித்திருக்க மாட்டார்’: நிமல் லான்சா

பசில் ராஜபக்‌ஷ நாட்டில் இருந்தால், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இடம்கொடுத்து இருக்க மாட்டார் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான ஆணைக்குழு மக்கள் நலனை கவனத்திற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக மக்கள் ஒன்றரை வருட காலமாக தொழில்வாய்ப்புகளை இழந்து, கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

“உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்தின் தீர்மானித்தது.

ஆனால், எரிபொருள் விலை அதிகரிப்பு, ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக் கூடும்.

விலை அதிகரிப்பானது, சட்டியில் இருந்த மக்களை அடுப்புக்குள் விழச் செய்துள்ளது” என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன செயலாளரின் ஊடக அறிக்கையின் பின்னணியில் பசில் ராஜபக்‌ஷ இயங்கவில்லை என்றும் பசில் ராஜபக்‌ஷவுக்கு அவசியமானதை, அவர் நேரடியாகக் கூறுவார் என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.