இலங்கையில் எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட நிதியத்தில் பணம் காலியாகி இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது, அதன் இலாபத்தைக் கொண்டு நிலையான எரிபொருள் விலையைப் பேணுவதற்கான நிதியம் அமைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
உலகளாவிய எரிபொருள் விலை ஏற்ற, இறக்கங்களின் போது, இலங்கையின் எரிபொருள் விலையை நிலையானதாகப் பேணி, பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் குறித்த நிதியம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
குறித்த நிதியத்தில் 18 முதல் 20 பில்லியன் ரூபாய் நிதி இருந்த நிலையில், இப்போது நிதி காலியாகி இருப்பதாக இலங்கை எரிசக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையில் இருந்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை சமாளிப்பதற்காகவும், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் கடனைச் செலுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதுபோன்ற ஒரு நிதியத்தை மீண்டும் நிறுவுவதற்கு அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.