November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரிஷாட்டை கைதுசெய்யும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – இராதாகிருஸ்ணன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் நோக்கில், தேர்தல் காலங்களில் புத்தளத்தில் இருந்து அவர்களை மன்னாருக்கு அழைத்து செல்வது வழமையானதே. அந்த நடவடிக்கை சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் ரிஷாட்டை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரை கைது செய்து அரசியல் ரீதியில் பழிவாங்கல்களை தீர்த்துக்கொண்ட அரசாங்கம், அதன் அடுத்தக்கட்டமாக ரிஷாட்டையும் இலக்குவைத்துள்ளது. இவ்வாறான அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

அதேவேளை, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தை வன்மையாகக்கண்டிக்கும் அதேவேளை, ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டால்தான், அந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்படும்.

எனவே, இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்களை பாதுகாக்கவேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பும் கூட என்றார்.