அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளில் மீண்டும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா என்று இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கம் ஆராயவுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன் ஆளும் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மீண்டும் விலைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.