இலங்கையின் கடற்பரப்பில் ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ விபத்து காரணமாக கரை ஒதுங்கிய கழிவுகளில் இதுவரை 1,000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் கடந்த மாத இறுதியில் தீ விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் முப்படையினரும் இலங்கையின் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டு வருகின்றது.
இந்தப்பணியில் இதுவரை 44 கொள்கலன்களில் கப்பலிலிருந்து கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் நர்டில்ஸ் உட்பட, பல அபாயகரமான கழிவுப் பொருட்கள் சேரிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மதிப்பீடு செய்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
இதுவரை சேகரிக்கப்பட்ட கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
“இந்த பேரழிவின் தாக்கங்கள் பன்மடங்கு. ஆனால் அதே நேரத்தில், சுற்றுச்சூழல் நட்பு முறையில் பொறுப்புடன் இந்த கழிவுகளை அகற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும்”என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்க கூறியுள்ளார்.