தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு மலையக அரசியல் தலைமைகள் வருவார்களாக இருந்தால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் மஸ்கெலியா பகுதியில் 600 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அதன்போது குறிப்பிட்ட அவர் ”தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது கருத்தாகும். மலையக மற்றும் முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் கடந்தகாலங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், கொள்கை ரீதியிலான முரண்பாட்டால் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை” என்றார்.
இதேவேளை ”நிலைமையை உணர்ந்து, மலையக மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களோடு பொது நிலைப்பாட்டை எடுத்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.