
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்களை குறைந்தது 15 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, குறுந்தூர பஸ் ஒன்றுக்கான எரிபொருள் செலவு 700 ரூபாவினாலும் நீண்ட தூர பஸ் ஒன்றுக்கான எரிபொருள் செலவு 1200 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரின்ஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, சேவை கட்டணங்கள் உள்ளிட்ட பிற செலவுகளும் சமீபத்திய நாட்களில் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஏனைய பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது சங்கத்தின் நிலைப்பாட்டை போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கடந்த வருடம் நவம்பரில் பஸ் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவதற்கு சுகாதார பிரிவு வழங்கிய வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு பஸ் கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.