January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும்’: செல்வம் எம்.பி.

இந்த அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இதன்போது, தற்போதைய இக்கட்டான சூழ் நிலையில் எரிபொருள் விலையேற்றம் மக்களை வறிய நிலைக்கு கொண்டுசெல்லும்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கம் தன்னை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் முடக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கின்ற அரசாங்கமாக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரம், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது நாட்டில் இருந்து கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நாடு முழுமையாக முடக்கப்பட்டது.

ஆனால் நாடு முடக்கப்பட்டமைக்கான நோக்கம் வெற்றி பெற்றதாக இல்லை. காரணம் தொற்றாளர்களினதும், மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே இந்த நாட்டை முடக்குகின்ற நிலைமை தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ்- பேரள் கப்பல் தொடர்பாக ஒரு அவசர கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலை பார்க்கின்ற போது குறித்த கப்பலை நாட்டுக்குள் எடுத்ததற்கான நியாயப்பாட்டினை தெரிவிக்கின்ற வகையிலே குறித்த கூட்டம் அமைந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் மற்றும் மீனவ சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இலங்கையில் பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற போது அவை திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை ஏற்படுமா? என்ற நிலையில் எமது மீனவ சமூகம் அச்சத்துடன் இருக்கின்றது.

இதேவேளை கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறி தனித்து செயல்படாது என தெரிவித்த அவர், கூட்டமைப்பிற்குள் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வெளியில் வந்து செயல்படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை.

சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டுக்குள் இருந்து கொண்டு செயல்படுவோம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மக்களை நேசிக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.