July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் எரிபொருள் விலைகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும்; அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நாளை (14) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் கொரோனா தொற்று நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தமைக்கு ஆளும் கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது ஜனபெரமுன கட்சி, இதற்கான பொறுப்பை ஏற்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் (13) ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்து எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில விளக்கம் அளித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை அதிகரிக்க இந்த திட்டம் முன்வைக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இதுபோன்ற சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பது பொருத்தமானதல்ல என்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தரப்புகளுக்கு இடையே சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் குறித்து நாட்டில் பல தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதையடுத்து இது தொடர்பில் நாளை (14) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், எரிவாயு விலையை திருத்துவது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மாற்று முன்மொழிவுகளை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எரிவாயு சிலிண்டருக்கான விலையை குறைந்தது 500 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.