File Photo
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்தே எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை எடுத்ததாகவும், இதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எழுத்து மூலம் அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கே எதிரானது என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த ஆளும் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சகால காரியவசம், இந்த விடயத்திற்கு பொறுப்பேற்று உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள எரிச் சக்தி அமைச்சில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உதய கம்மன்பில விளக்கமளித்தார்.
இதன்போது எரிபொருள் விலை அதிகரிப்புக்கு தான் பொறுப்புக் கூற வேண்டியவர் இல்லை என்று கம்மன்பில தெரிவித்தார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் இணைந்தே தீர்மானத்தை எடுத்தார்கள். அது தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்றும் அமைக்கப்பட்டது. அதன்படி எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் எழுத்து மூலம் அனுமதியையும் வழங்கியிருந்தார் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால் தான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றும், ஜனாதிபதி, பிரதமரின் தீர்மானத்தை எதிர்க்கும் அவர்களின் கட்சி செயலாளரான சாகர காரியவசமே பதவி விலக வேண்டும் என்றும் கம்மன்பில இதன்போது கூறியுள்ளார்.