July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மோசமான ஆட்சி முறையை கைவிடாவிட்டால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்”; சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம், மோசமான ஆட்சி முறையை கைவிடாவிட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய அரசாங்கமானது மக்கள் மீது அடக்குமுறைகளை, வன்முறைகளைப் பிரயோகித்து மக்களை அடக்கி ஆள நினைக்கின்றதாகவும் குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு பாடுபடுவதாகவும் இதன்போது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு இந்த அரசாங்கம் எதிர்காலத்திலாவது சரியான முறையில் செயற்படாவிட்டால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாட்டில் நாங்கள் ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரசாங்கமானது கடும் போக்கை கைவிட்டு அடக்குமுறையை விட்டு குடும்ப ஆட்சி முறையினையும் கைவிட்டு செயற்பட வேண்டும் எனவும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினுடைய பங்களிப்போடு அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தினால் எந்தவிதமான தகுந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பயணத்தடை என்கின்றார்கள் ,ஊரடங்கு என்கிறார்கள். ஆனால் ஒழுங்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை ‘சுகாதார அமைச்சுக்குள்ள அதிகாரத்தினை வேறு யாராவது பாவிக்கிறார்களா? அல்லது வேறு என்ன நடைபெறுகின்றது? என்பது எமக்கு புரியவில்லை.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் யாராவது ஒருவர் பொறுப்புக் கூற முன்வர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களின் பதவிகளைக்கூட இராஜினாமா செய்யலாம்’ எனவும் சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்