July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவாரா கம்மன்பில?

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆளும் கட்சியினால் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் உதய கம்மன்பில இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.

இன்று பிற்பகல் எரிச்சக்தி அமைச்சில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் தமது விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இது குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம், எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நெருக்கடியான நிலைமை ஏற்படக்கூடுமென்பதை அறிந்து, உரிய தருணத்தில் தேவையான தீர்மானங்களை எடுக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தவறியதன் காரணமாக அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து இன்றைய தினத்தில் அமைச்சர் விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளார்.