July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் இலங்கையின் பொருளாதாரமே வீழ்ந்துவிடும்”

‘ஜீஎஸ்பி பிளஸ்’ வரிச் சலுகையை இலங்கை இழக்குமாறு இருந்தால் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக உயரும் என்பதுடன், நாட்டில் ஆயிரக் கணக்கானோர் வேலை இழக்கும் நிலைமையும் ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜீஎஸ்பி வரிச் சலுகை மூலம் நாட்டின் ஆடை ஏற்றுமதி, மீன் ஏற்றுமதி என்பன முன்னேற்றம் கண்ட நிலையில், தற்போது அந்த வரிச் சலுகையை இல்லாமல் செய்யவது குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை, நாட்டை பெருளாதார ரீதியில் பெரியளவில் பாதிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கொவிட் தொற்று நிலைமையால் இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், எரிந்த கப்பல் தொடர்பான பிரச்சனையால் எமது மீன்பிடித் துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த நேரத்தில் அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்காக ஆடைத் தொழிற்துறையும், தேயிலையுமே எஞ்சி இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டுக்கு ஜீஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போகுமாக இருந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து டொலருக்கு நிகராக 300 ரூபாவை செலுத்த வேண்டிய நிலைமையே ஏற்படும் என்பதுடன், ஆயிரக் கணக்கானோர் தொழில் வாய்ப்புகளை இழக்கவும் நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த விடயத்தை அரசியலாக்கி நடந்துகொள்ளாது, ஜீஎஸ்பி வரிச் சலுகையை பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க அந்த அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.