“தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சீன நிறுவனத்துக்கு வழங்க இணங்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்.கந்தர்மடம்,அரசடிப் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கி வைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘கீரிமலை ராஜபக்ச மாளிகை’ என நாங்கள் அறிந்துகொண்டிருக்கின்ற இந்த இடமும் விற்பனைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகின்றது. நாட்டை விற்கின்ற அவர்களுடைய இன்றைய திசையிலே இதுவும் ஒரு பகுதி. ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் இந்த மாளிகை அமைக்கப்பட்டபோதே தமிழ் மக்களின் பல ஏக்கர் காணிகள் அங்கு இருந்தன. அந்தக் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுக்குமாறு வழக்குகளும் நடைபெறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சவின் ஜனாதிபதி மாளிகை மத்திய அரசுக்கு தேவையில்லை என்று அன்று கூறினார் .
மைத்திரிபால அவ்வாறு கூறியபோது,வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைக்கு இந்த மாளிகையை வழங்குமாறு கோரினார்.இந்த மாளிகையை வடக்கு மாகாண சபைக்கு வழங்குமாறு கோரி மாகாண சபையில் தீர்மானம்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்த மாளிகையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.