October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொடர் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்; இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையால் தொடர் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் சீரான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. இதனை ஈடுசெய்ய உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

“புலம்பெயர் நாடுகளில் உள்ள கொடையாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் இங்குள்ள மக்களுக்கு அதிகளவான உதவிகளை வழங்கி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலைகளால் குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான மாற்று வழிகளை அரசால் முன்னெடுக்க முடியவில்லை.

அவ்வாறு முன்னெடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. காரணம் அதிகமான மாணவர்கள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள்.அவர்களால் புதிய தொழில்நுட்ப முறை கற்கைகளை தொடர முடியாதுள்ளது.ஆகையால் கொடையாளர்களும், தன்னார்வத் தொண்டர்களும் அவர்களின் தொழில்நுட்பத் துறைக்கூடான கற்றலுக்கு உதவ வேண்டும்.

அத்தோடு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வறிய மாணவர்கள் கற்பதற்கு வசதியாக அவர்களின் வறுமை நிலையை கருத்தில்கொண்டு அவர்களின் கற்றலுக்கான இணைய வசதிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.