
இலங்கையின் தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா வைரஸ் தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முழு இலங்கையும் தொற்று வலயமாக அறிவிக்கப்பட்டாலும், இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமை போல் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவனங்களின் பிரதானிகளுடைய கடமையாகும்.
அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை, பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.
ஊழியர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயம் என்பதுடன் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.