July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக்கட்டுப்பாட்டை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தல்!

இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்குமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், 2000 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதையும் இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மருத்துவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கும் என்று இலங்கை மருத்துவர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வரை 14 ஆம் திகதிக்கு பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகளின் போது செயற்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் சமூகத்தில் மறைந்துள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் இலங்கை மருத்துவர்கள் சங்கம் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுக்கும், தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் புதிய தொற்றாளர்களை இனங்காண்பதற்கான வாய்ப்பு குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் இன்று (12) மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 221,263 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 186,516 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 2,073 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.