இலங்கையில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில் பதவி விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லும் தருணத்தில் தமது கட்சி மற்றும் அதன் தலைவரை அபகீர்த்திக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பொதுஜன பெரமுன சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நிலைமை ஏற்படக்கூடுமென்பதை அறிந்து, உரிய தருணத்தில் தேவையான தீர்மானங்களை எடுக்க அமைச்சர் உதய கம்மன்பில் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் முழுமையான பொறுப்பை ஏற்று பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பொதுஜன பெரமுன கோரியுள்ளது.