யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இம்மாத இறுதியில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கப்படாத மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னரே, முன்னதாக வழங்கிய மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசிகளில் ஒரு தொகுதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி இலங்கையில் உள்ள அனைவருக்கும் இவ்வருடத்துக்குள் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கடந்த 9 ஆம் திகதி இறுதியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளில் பெரும்பாலானவை இரண்டாம் டோஸுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இவற்றில் அதிகமான தடுப்பூசிகள் மேல் மாகாணத்தில் முதல் டோஸ் பெற்ற மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.