(Photo : WHO)
பிரிட்டனில் குரங்கு அம்மை (Monkey Pox) நோய் தொற்றுக்குள்ளான இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவின் டெல்டா மாநிலத்திலிருந்து மே 08, 2021 அன்று பிரிட்டன் வந்த ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த நபர் பிரிட்டன் வந்தது முதல் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மே 10 முதல் குறித்த நபருக்கு முகத்தில் தொடங்கி சிறிய கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மேற்கு ஆபிரிக்க கிளாட் குரங்குஅம்மை வைரஸ் தொற்று உள்ளமை மே 25 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.
நோய் நிலைமை அதிகரித்ததையடுத்து அவருக்கு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இவரை தொடர்ந்து அதே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் தோன்றியதையடுத்து அவருக்கும் மே 31 அன்று குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
இந்த நைஜீரிய குடும்பம் பிரிட்டன் வந்தது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் குரங்கு அம்மை தொற்று நாட்டில் பரவுவதற்கான ஆபத்து குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதுவரை பிரிட்டனில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான இந்த இரண்டு வழக்குகளுடன் நைஜீரியாவிலிருந்து முன்னர் வந்த ஒருவர் உட்பட மூன்று வழக்குகள், 2018 செப்டம்பரில் இரண்டு பேர், 2019 டிசம்பரில் ஒருவர் என மொத்தமாக ஆறு பேருக்கு குரங்கு அம்மை நோய் பதிவாகியுள்ளது என உல சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
நைஜீரியாவின் தேசிய சுகாதார பிரிவும் இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
‘குரங்கு அம்மை’ என்பது இப்போது அழிக்கப்பட்டுள்ள மனித பெரியம்மைக்கு ஒத்த ஒரு அரிய ஜூனோடிக் வைரஸ் நோயாகும்.
இது பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் வனப்பகுதிகளில் அவ்வப்போது நிகழ்கிறது.
இந்த ‘குரங்கு அம்மை’ வைரஸ் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
தொற்றுக்குள்ளானவரின் கொப்புளங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பெரிய நீர்த்துளிகள் வழியாக இது மற்றவர்களுக்கு பரவுகின்றது.
காயங்களுக்கு உள்ளான தோல் அல்லது மூக்கு, வாய், கண்கள் போன்ற சளி சவ்வுகள் அல்லது சுவாசக் குழாய் வழியாகவும் வைரஸ் உடலில் நுழையலாம்.
‘குரங்கு அம்மை’ நோய் தொற்று 6 -13 நாட்களுக்குள் வெளிப்படுவதுடன், இந்த நோய் பெரும்பாலும் 14-21 நாட்களுக்குள் தானாகவே தளும்புகளுடன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.