இலங்கையில் போலி செய்திகளை கையாள்வதற்கு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் மற்றும் ஒற்றுமையின்மை, வெறுப்பு போன்றவற்றை தோற்றுவிக்கும் போலிச்செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளின் பகிரல் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உரிய விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் இலங்கை பொலிஸின் குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் கணனி குற்றப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பிரிவுகள் இணையத்தை கண்காணிப்பதன் மூலம் உரிய விதிகளை மீறுவோருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவினால் நேற்று (11) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
அவதூறு மற்றும் வன்முறை தூண்டல்களுடன் தொடர்புடைய சம்பவங்களின்போது உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் , சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளில் ‘போலி செய்திகளை’ வகைப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் நிர்வாகத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சங்கம் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அவர்களின் உள்ளார்ந்த முடிவுகளை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் பொலிஸ் உள்ளிட்ட நிறைவேற்று குழுவின் உறுப்பினர்களுக்கு இச்சட்டத்தின் மூலம் அனுமதி வழங்கப்படுகின்றமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் ஊடாக அபிப்பிராய பேதங்கள் மற்றும் விமர்சனங்களை கண்ணியமான முறையில் வெளிப்படுத்துபவர்களின் குரல் வளையை நெரிப்பதற்காக அதிகாரிகள் அத்தகைய சட்டங்களை பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.
“சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் விதிகள், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தடுப்பதற்காக பொலிஸாரினால் தவறாக பயன்படுத்தப்படலாம்” என்று சங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
கொவிட் -19 தொற்று நோயின் விளைவாக நாடு பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் நேரத்தில், மக்களின் பேச்சு, கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடு, உடன்படாத உரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
“அரசாங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆதரிக்க அல்லது விமர்சிக்கும் உரிமை ஜனநாயக வாழ்க்கை முறைக்கு அடிப்படையானது எனவும் ஜனநாயகம் என்பது கருத்து வேறுபாட்டை சகித்துக்கொள்வது மட்டுமல்ல, அது ஊக்குவிக்கப்பட வேண்டும்.” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடுமையான விமர்சனங்களை அல்லது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியதற்காக கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பானது, குடிமக்களின் சுதந்திரத்தை அழிக்கக்கூடிய ஒரு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
எந்தவொரு முறைப்பாட்டையும் முழுமையாக விசாரிப்பதற்கு முன்னர் ‘போலி செய்திகள்’ என்று குற்றத்திற்காக எந்தவொரு நபரையும் கைது செய்வதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
பிடியாணையின்றி கைது செய்வதற்கான எந்தவொரு முடிவும் அடிப்படை சுதந்திரங்களை பாதிக்கும். மேலும் அடிப்படை உரிமையை அடக்குவதற்கோ அல்லது ஒடுக்குவதற்கோ வழிவகுக்கக்கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சட்டம் உட்பட்டு குற்றஞ்சாட்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படும் அதேவேளை, தேவைப்படுமிடத்து சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் எந்தவொரு நபரையும் கைது செய்வதென்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமாகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சட்ட அமுலாக்கமானது நியாயமானதாகவும் சமத்துவமானதாகவும் தெரிவிற்கு அப்பாற்பட்டதாகவும் கையாளப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்ட விதிகளின் எந்தவொரு மீறலையும் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்காணிக்கும் என தெரிவித்துள்ளது.