இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா எப்போதுமே உதவியளிக்க தவறியதில்லை என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கியூ ஷெங்வொங்,எத்தகைய நிலைமையில் இருந்தாலும், எத்தகைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டாலும், இலங்கையுடன் சீனா நேர்மையுடனும் நம்பகத்தன்மையுடனுமே உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனையை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சீன தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இங்கு பேசுகையில்;
இலங்கை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த நல்ல நாள் இன்றாகும். சீன – இலங்கை உறவின் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க நல்ல நாளும் இதுவாகும்.கொவிட் -19 நோய் தொற்று கடுமையாக இருக்கும் பின்னணியில், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான பொலன்னறுவையில் சீன – இலங்கை நட்பு மருத்துவனை ஸ்தாபிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இதுவென்பது முக்கியமான விடயமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பும் பல்வகை இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன. அதில் முக்கியமானதொன்றாக கொவிட்-19 பாதிப்பை கூறுவதுடன் இரு நாடுகளும் இந்த நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்கின்றன.
இந்நிலையில் இரு நாடுகளுமே கையோடு கைகோர்த்து ஒத்துழைத்ததன் விளைவாக இந்த அதிநவீன சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதென்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
இம்மருத்துவமனை தெற்காசியாவில் உள்ள 175 கோடி மக்களுக்கு நன்மை கொண்டு வரும். சீன – இலங்கை நட்புறவின் புதிய அடையாளமாக விளங்கும் இம்மருத்துவமனை, சீன உதவியுடன் கட்டப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், உச்ச நீதிமன்றக் கட்டிடம், தேசியக் கலை அரங்கு, கண்டி – நீர்த் தொழில் நுட்ப ஆய்வுக்கான செயல்விளக்க மையம் போன்ற திட்டப்பணிகளைப் போல் வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா எப்போதுமே முந்தி வந்து உதவியளிக்க தவறியதில்லை. இருநாட்டு இராஜதந்திர உறவு நிறுவப்பட்ட 64 ஆண்டுகளில், சீனா எத்தகு நிலைமையில் இருந்தாலும்,எத்தகைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டாலும், இலங்கையுடன் நேர்மையாக பழகி, சமத்துவ நிலையில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை தந்து, ஒத்துழைப்புடன் இன்னல்களின் போது ஒத்துழைப்பு வழங்குகின்றது.
தற்போது வரை, சீனாவின் உதவியுடன் இலங்கையில் கட்டிமுடிக்கப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை 116 ஆகும்.இதன் பொருட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 8000 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்ளுர் அரசுகள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் இலங்கையின் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.