தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக சனிக்கிழமையும் (12) ஞாயிற்றுக்கிழமையும் (13)விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும்,இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக வார இறுதி தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த காலப்பகுதியில் விருந்துபசாரங்கள் , கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குளியாபிட்டி பகுதியிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அதற்கமைய 133 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை,இரத்தினபுரியில் 125 பேரும் மாத்தறை பகுதியில் 89 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அத்துருகிரிய – ஹபரகட பகுதியில் ட்ரோன் கமரா ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக செயற்பட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இது வரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 29 ஆயிரத்து 15 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை,மேல்மாகாணத்தின் எல்லை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது , 3,111 வாகனங்களில் பயணித்த 4,962 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது எவ்வித தேவையும் இன்றி வருகை தந்திருந்த 104 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.