February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையில் 22% பாடசாலை மாணவர்கள் மட்டுமே ஒன்லைன் மூலம் கல்வியை தொடர்கின்றனர்“

இலங்கையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க கல்வி அமைச்சு முயற்சித்து வருகின்றது.

எனினும் இந்த முயற்சிகள் ஊடாக நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 22% மாணவர்கள் மட்டுமே தமது கல்வியை தொடர்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்  பாடசாலை மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஆசிரியர் ,அதிபர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, மாற்றுத் திட்டமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக மயமாக்கல் குறித்த மாணவர்களின் மனப்பான்மையை வளர்ப்பதற்கு விரிவுரைகளுக்குப் பதிலாக கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இதன் போது பரிந்துரைக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக எந்தவொரு உதவியையும் வழங்க தயாராக உள்ளதாக இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.