July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடன் சலுகை வழங்காத வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்து முறையிட விசேட தொலைபேசி இலக்கம்!

வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், அது குறித்த முறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகைகளை வழங்குமாறு கடந்த மாதம் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் தமக்கு உரிய கடன் சலுகைகள் கிடைக்கப் பெறாத பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய 011 – 24 77 966 எனும் இலக்கத்தை ஏற்படுத்தி மத்திய வங்கியின் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனப் பிரிவுக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களின் சுமைகளை குறைப்பதற்காக வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட தனிநபர் கடன்களுக்கு சலுகைகளை அல்லது நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.