கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத இக்கட்டான காலகட்டத்தில் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது மிகவும் பாரதூரமான விடயமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, இரண்டும்கெட்டான் நிலையில் நாட்டை திறப்பதனால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும், வைரஸ் பரவல் வேகம் அதிகரித்தால் மரண வீதமும் வேகமாக அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டை முடக்குவதனால் உடனடியாக பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியாது. ஆகவே அதற்கான பெறுபேறுகள் வரும் வரையில் நாம் பொறுமையாக மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் எனவும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஆகவே நாட்டை முடக்குவதே எமக்கிருக்கும் ஒரே தீர்வாகும். இதற்கு முன்னரும் இரண்டரை மாதங்கள் நாடு முடக்கப்பட்டது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் வைத்திய துறை பலவீனம் கண்டுள்ளது.அவசர சிகிச்சை பிரிவில் இடமில்லை, தனிமைப்படுத்தல் முகாம்களில் இடமில்லை, ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ‘நாடு முழுமையாக திறக்கப்படுமாயின் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் வைரஸ் பரவல் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தும்.
சுகாதாரத் துறையினரால் தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்’ என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.