November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் பதவிக்கு முதல் தடவையாக பெண் அதிகாரி நியமனம்!

இலங்கையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றும் இமேஷா முதுமால என்ற பெண் அதிகாரியே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸில் இணைந்து கொண்டுள்ள இவர், 14 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள நிலையிலேயே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவர், நுகேகொட பிராந்திய குற்ற விசாரணை பிரிவிலும், பொலிஸ் இசைவு சான்றிதழ் பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணி பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ள இவர், அமெரிக்காவின் ஹவாய் காவல் பயிற்சி நிறுவனத்தில், நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான விசேட டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

அவ்வாறே, தாய்லாந்தின் பெங்கொக் நகரில் அமெரிக்க எவ்.பி.ஐயினால் நடாத்தப்படும் பணச்சலவை தடுப்பு டிப்ளோமாவையும், மலேசியா காவல்துறை அகடமியில் சமூக காவல்துறை தொடர்பான விசேட டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

மேலும் இந்தியாவின், ஹைதராபாத் காவல்துறை அகடமியில் இணையக் குற்றம் தொடர்பான விசேட டிப்ளோமாவையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.