இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குமாறு உரிமம் பெற்ற குத்தகை மற்றும் விசேட நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் நேற்று (10) வெளியிடப்பட்ட சிறப்பு சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் பெறுநர்களுக்கான சலுகை கால நிவாரணங்களை ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் கடன் பெறுநர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மீள் செலுத்துவதற்கான சலுகையின் போது கடன் தொகை மற்றும் வட்டி வீதம் தொடர்பில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, கடன் மற்றும் குத்தகை தொகையினை மீள செலுத்துவதற்கான காலத்தை நீடிக்க விரும்பும் கடன் பெறுநர்கள் இது தொடர்பில் எழுத்துபூர்வ விண்ணப்ப படிவத்தை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மின் அஞ்சல் அல்லது குறுந்தகவல் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தமது வாடிக்கையாளர்களுக்கு சலுகையை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் அது தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.