நுகோகொடை பிரதேசத்தில் நபர் ஒருவர், 4 வயது சிறுவனுக்கு (பியர்) பருகக் கொடுத்து அந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுவனுக்கு மதுபானம் வழங்கிய நபர், சிறுவன் மற்றும் சிறுவனின் தாயார் ஆகியோர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமையில் வாழ்ந்து வரும் சிறுவனின் தாயார், சிறுவனை பாட்டியுடன் விட்டுவிட்டு தொழிலுக்கு செல்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த சூழ்நிலையிலேயே அந்த நபர் சிறுவனுக்கு பியர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த பியர் டின்னில் பியருக்கு பதிலாக வேறு ஒரு பானம் தான் வழங்கப்பட்டது என சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தாம் பொழுது போக்கிற்காக இதனைச் செய்ததாகவும். சிறுவனுக்கு பியர் வழங்கவிலை என்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நபரின் செயல் தொடர்பில் பொலிஸார் கடுமையாக சாடியுள்ளதுடன், இவ்வாறான ஒரு செயலை உமது குடும்பத்தில் உள்ளவருக்கு செய்வீரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நபரின் செயல் முழு நாட்டிற்கும் ஒரு மோசமான முன்னுதாரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் அயல் வீட்டில் வசிக்கும் குறித்த 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக குற்றவியல் கட்டளைச் சட்டம், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சிறுவன் குறித்த இளைஞருடன் நெருங்கி பழகி வருவதாகவும் இவ்வாறு ஒரு செயலை குறித்த இளைஞர் செய்வார் என தாம் ஒரு போதும் எண்ணவில்லை என்றும் சிறுவனின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெரும் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக உலகளாவிய ரீதியில் அதிகளவான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தொற்று நோயியல் பிரிவு கடந்த வருடம் இறுதிப் பகுதியில் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வாய் வார்த்தைகள் மூலமான துஷ்பிரயோகங்கள் 76.8% ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று 7.8% உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கும் 5.6% சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெறும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 1929 என்ற விசேட எண்ணுக்கு அழைத்து சிறுவர்களுக்கு உதவமுடியும்.