July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் இருந்து வந்து தலைமறைவாக இருந்த நபர் முள்ளியவெளி பகுதியில் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக, இலங்கைக்குள் பிரவேசித்து தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவெளி பகுதியில் வைத்து 36 வயதுடைய சுப்ரமணியம் பிங்கல என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த நபர் சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் ஊடாக, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சந்தேகநபர் சென்னை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர், இந்தியாவின் நாகபட்டினம் பகுதியில் சுமார் 10 வருடங்கள் வாழ்ந்து வந்த குறித்த நபர், இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி கடல் மார்க்கமாக இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறல், குடிவரவு – குடிப்பெயர்வு சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று (11) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.