இலங்கையில் கடந்த சில வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்கள் பல இன்று காலை முதல் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக ஏழு மாவட்டங்களின் 26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி மற்றும் முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் கூம்ஸ் தோட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்விஸ் தோட்டம், தேசிய வீடமைப்பு திட்டம், அத்கம் வீடமைப்பு திட்டம், அல்விஸ் தோட்ட கிராமம், கொக்டேன் மாவத்தை, பரணவத்த உள்ளிட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தினாலும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கட்டுப்பாடுகள் பலவற்றை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் இன்றைய தினத்தில் அறிவிக்கப்படவுள்ளது.