July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிட் தொற்றாளர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க முடியாதமையே கொவிட் மரணங்கள் அதிகரிக்க காரணம்’

கொவிட் -19 வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை உண்மையே.ஆனால் இது ஒரே நாளில் பதிவான மரணங்களாக கணக்கிடக்கூடாது.இறுதியாக பதிவான 67 மரணங்களும் கடந்த இருவார காலத்தில் ஏற்பட்டது என்கிறார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன.

வைத்தியசாலைகளில் போதிய இடவசதி இல்லாதமை மற்றும் கொவிட் நோயாளர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க முடியாதமையே கொவிட் மரணங்கள் அதிகரிக்க காரணம் என்பதை சுகாதார பணியகம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொவிட் வைரஸ் பரவல் குறித்த தரவுகள் எமக்கு நாளாந்தம் கிடைத்து வருகின்றன.எனினும் வாராந்த ஆய்வுகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.ஏனெனில் தரவுகள் பல்வேறு வழிமுறைகளில் எமக்கு கிடைக்கின்றன.எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தரவுகளுக்கு இடையில் முரண்பாடுகள்,பொருந்தா தன்மைகள் காணப்படுகின்றன.

எனினும் அனைத்தையும் ஒப்பிட்டு இறுதியாக எடுக்கும் பொதுவான ஒரு தரவையே ஊடகங்களுக்கு வெளியிடுகின்றோம்.ஆகவே வாராந்த தரவுகளையே எம்மால் வெளிப்படுத்த முடியும்.இதில் சில குறைபாடுகள், காலதாமதங்கள் ஏற்படுவதை நாம் மறுக்கவில்லை என்றார்.

மரணங்களை பொறுத்தவரையில் நாளாந்தம் பதிவாகும் மரணங்களை விடவும் வாராந்தம் பதிவாகும் மரணங்களை கொண்டே நாம் தீர்மானம் எடுக்கின்றோம். எவ்வாறு இருப்பினும் நாளாந்த மரண வீதமானது அதிகரித்துள்ளது.அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.நாளுக்கு நாள் இது உயர்வை காட்டுகின்றது . இதனை சுகாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தி வருகின்றனர் என்றார்.