இலங்கையில் அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் நாளை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், தாம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் தமது முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தீர்வு வழங்க சுகாதார அமைச்சர் தவறியதாகவும் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், கொரோனா தொற்று மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படும் என்றும் அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு கடமைகளுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குதல், மருத்துவரல்லாத சுகாதார ஊழியர்களுக்கு நியாயமான கொடுப்பனவை வழங்குதல், சுகாதாரத்துறை வெற்றிடங்களைப் பூரணப்படுத்த புதிய நியமனங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.