July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய 343 இடங்கள் அடையாளம்; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

நாடு பூராகவும் மண்சரிவு ஏற்படக்கூடிய 343 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் கடந்த சில தினங்களில் நாட்டின் 27 பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதனிடையே, நாட்டில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.