
இந்தியாவில் பரவிவரும் டெல்டா மற்றும் பிரித்தானியாவில் பரவிவரும் அல்பா கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் இலங்கையின் பல மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் இந்தியாவில் பரவும் B.1.617 (டெல்டா) கொரோனா வைரஸ் திரிபுடன், வஸ்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்திய வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இலங்கையர் இவறாகும். குறித்த நபர் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனது குழு நடத்திய ஆய்வில் இந்த விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் அல்பா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சிலர் நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய, வாரியபொல, மாத்தறை, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிகின்ற ஊழியர்கள் சிலருக்னு அல்பா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ஊழியர்கள் அனைவருக்கும் கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
எனினும், அல்பா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.