இலங்கை கடற்பரப்பில் கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய கப்பலில் இருந்து கடலில் கலந்த பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் சிறிய பிளாஸ்டிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய பிளாஸ்டிக் உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று அதனை ஆராய்ந்து வருகின்றனர்.
கப்பலில் இருந்த பெருமளவான பிளாஸ்டிக் கொள்கலன்கள் கடலில் விழுந்ததுடன் அவை கடந்த சில தினங்களாக கொழும்பு, நீர்கொழும்பை அண்மித்த கடல்பகுதிகளில் கரையொதுங்கி வரும் நிலையிலேயே மன்னார் கடற்கரையிலும் அதேபோன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.